தமிழக மீனவர் பிரச்சினையைத் தீர்க்க இலங்கையுடனான உறவு தேவைப்படுகிறது என மத்திய அமைச்சர் வாசன் கூறினார். ஈரோட்டில் விழா ஒன்றில் பங்கேற்கவந்தபோது அவர் அளித்த பேட்டி:
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து காங்கிரசின் நிலைப்பாட்டை தமிழக சட்டப்பேரவையில் தெளிவாக தெரிவித்துவிட்டோம். மாநாட்டில் பங்கேற்கவில்லையென்றால், இலங்கைத் தமிழர் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது. இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெறவும், தமிழக மீனவர் பிரச்சினையைத் தீர்க்கவும் மத்திய அரசு துணை நிற்கும்.
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என நான் இருமுறை பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தினேன். எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளை மதித்து பிரதமர் மாநாட்டைப் புறக்கணித்துள்ளார். பிரதமர் பங்கேற்காதது இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ள நெருக்கடியான தகவல் ஆகும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
இலங்கையுடனான உறவில், எல்லா வாய்ப்புகளையும் முழுவதுமாக மூட முடியாது. தமிழர்கள் உரிமைகளைப் பெறுவதற்காக, 13-வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றவும், அங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படும் ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளை முடிக்கவும், இலங்கையுடனான உறவு தேவைப்படுகிறது. மேலும், தமிழக மீனவர் பிரச்சினையைத் தீர்க்கவும் அது அவசியமாகிறது.
சவூதியில் பாதிப்புக்குள்ளாகி உள்ள தமிழர்களுக்கு உதவுவது குறித்து மத்திய அமைச்சர் வயலார் ரவியிடம் பேசியுள்ளேன். அதற்குத் தேவையான உதவிகளை செய்ய அவர் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்றார்.