சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பிரபாகரன் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடனடியாக பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடுவார்கள். எனினும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முதலமைச்சர் பதவிக்கோ, பிரதமர் பதவிக்கோ பொருந்தாது.
சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாவிட்டாலும் கூட ஒருவர் 6 மாதங்கள் வரை அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ பதவி வகிக்க முடியும். ஆகவே, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் காரணமாக முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தகுதியை ஜெயலலிதா இழந்து விடவில்லை. இப்போதும் அவரே முதலமைச்சராக நீடிக்கிறார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றது செல்லாது என்றும், கடந்த 16.5.2011 அன்று பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதாதான் முதலமைச்சர் என்றும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு விசாரணைக்கு தகுதியற்றது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.