தமிழகத்துக்கு மின்சாரம் தரும் 11 மின் நிலையங்களிலுள்ள 15 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் ஐந்து மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நெய்வேலியிலுள்ள மூன்று நிலையங்களின் ஐந்து அலகுகள், தேசிய அனல்மின் கழகத்தின் சிம்மாத்ரி நிலையத்தில் ஒரு அலகு, வள்ளூர் மின் நிலையத்தில் ஒரு அலகு, மேட்டூர் புதிய மின் நிலையம், வடசென்னை புதிய மின் நிலையத்தின் இரண்டு அலகுகள், தூத்துக்குடி மின் நிலையத்தில் ஒரு அலகு, எண்ணூரில் இரண்டு அலகுகள், கல்பாக்கம் மற்றும் கைகா அணு மின் நிலையத்தில் தலா ஒரு அலகு என, மொத்தம் 15 அலகுகளில், சுமார் 3,500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வள்ளூர் நிலையத்தின் ஒரு அலகில், நிலக்கரி தட்டுப் பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணு மின் நிலைய ஒரு அலகில், மின் உற்பத்திக் கருவியில் ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்டு புதிய உபகரணங்கள் பொருத்தப் பட்டதால், தற்போது பராமரிப்பு பணிகள் நடப்பதாக, தேசிய அணு மின் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் நிலையங்களின் உற்பத்தி குறித்து, மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:
“தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, காற்றாலை களிலிருந்து அதிகபட்சமாக 3,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கும். பெரும்பாலும், ஏப்ரல் இறுதி வாரத்திலிருந்து, அக்டோபர் வரை காற்றாலைகளில் அதிக மின்சாரம் உற்பத்தியாகும்.
இதனடிப்படையில், ஏப்ரல் முதல் அக்டோபருக்குள், மின் நிலையங்களின் ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த ஆண்டில் நெய்வேலி மின் நிலையம், கல்பாக்கம், சிம்மாத்ரி மற்றும் கைகா மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகள் தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால், மத்திய மின் நிலையங்களிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சார அளவு அடிக்கடி குறைக்கப்படுகிறது” என்றனர்.