தமிழகம்

இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசு: தமிழக தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நாடாளுமன்ற குழு அளித்துள்ள பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டிருப்பதற்கு தமிழகத் தலைவர்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளி யிட்டுள்ள கருத்துகள் வருமாறு:

மாநிலங்களவை திமுக உறுப் பினர் டி.கே.எஸ். இளங்கோவன்:

தற்போது குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதாகக் கூறப் படும் பரிந்துரைகளின் முழு விவரங்களும் தெரியவில்லை. இந்தி உட்பட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அதேநேரத்தில் கட்டாயமாக இந்தி திணிக்கப்பட்டால் அதனை கடுமையாக எதிர்ப்போம்.

மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியன்:

குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்களின் பேச்சு, அறிக்கை இந்தியில்தான் இருக்க வேண்டும் என யார் கூறினாலும் கண்டிக்கத்தக்கது. நிச்சயம் குடியர சுத் தலைவர் இதை ஏற்றிருப்பார் என்பதை நான் நம்பவில்லை. இந்தி தெரிந்தவர்களாக இருந்தால் மட் டுமே இந்தியில் பேச வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும். இந்தியில்தான் பேச வேண்டும் என்பது ஏற்கத்தக்கதல்ல.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன்:

பல மொழிகள் பேசப் படும் நாட்டில் ஒரு மொழிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளிப்பது தேவையற்ற பிரச் சினைகளை உருவாக்கும். குடி யரசுத் தலைவரும், மத்திய அமைச் சர்களும் இந்தியில் உரையாற்ற வேண்டும் என்பது கண்டிக்கத் தக்கது. இதனை யார் பரிந்துரை செய்திருந்தாலும் அதனை ஏற்க முடியாது.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

நரேந்திரமோடி அரசு பதவி ஏற்ற பிறகு ஆசிரியர் தினத்தை குரு பூர்ணிமா என சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள எல்லா கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதனை நானும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்த்தோம். இதையடுத்து அந்த சுற்ற றிக்கை திரும்பப் பெறப்பட்டது. அனைத்து நிலைகளிலும் இந்தி மொழியை திணிப்பது கண்டிக்கத் தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:

குடியரசுத் தலைவரும், மத்திய அமைச்சர்களும் இந்தியில்தான் பேச வேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமில்லை. இந்தி தெரியாத ஒருவர் மத்திய அமைச்சரானால் அவர் எப்படி இந்தியில் பேச முடியும்? இந்தியில் அவர் எப்படி அறிக்கை வெளியிட இயலும்? பல மொழிகள் பேசக்கூடிய, பல இனங்களைக் கொண்ட இந்தியா வில் இந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ள முடியாதது. அதனை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டிருப்பது சரியல்ல.

பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்:

கடந்த 2011-ல் அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்ற குழு அளித்த பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தி தெரிந்த மத்திய அமைச்சர்கள் இந்தியில் உரையாற்றலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, பாஜக அரசு இந்தியை திணிக்கிறது என்கிற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. பாஜகவைப் பொறுத்தவரை அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன்:

இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வாக்குறுதி அளித்தார். 1965-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு பிறகு அப்போது பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி, நேருவின் வாக்குறுதிக்கு சட்டவடிவம் கொடுத்தார். முன் னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்றக் குழு அளித்த பரிந்துரை இதற்கு விரோதமானது. எனவே, இதனை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டது தவறானது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயம் திணிக்கும் முயற்சிதான் இது. தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால் இதனைக் கைவிட வேண்டும். மத்திய அரசு வேண்டுமென்றே செய்யும் இச்செயலை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

SCROLL FOR NEXT