திருச்சி மாணவி பிருந்தாதேவியின் ஏழ்மை நிலையை அறிந்து, மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டுக் கட்டணமாக ரூ.50 ஆயிரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அம்மா பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, அந்தநல்லூர் ஒன்றியம், மேலகுழுமணி கிராமத்தைச் சேர்ந்த முத்துவீரன் - மலர்க்கொடி ஆகியோரது மகள் பிருந்தாதேவி, தனது தந்தை உடல் நலம் சரியில்லாதவர் என்றும், தனது தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை வழிநடத்தி வருவதாகவும் தெரிவித்து, மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.
பிருந்தாதேவியின் வேண்டுகோளை ஏற்று, அம்மாணவியின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டு கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உட்பட மொத்தம் ரூ.50 ஆயிரம் அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்டில் இருந்து வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.