வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன். இவர், கடந்த 2001-06 வரை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில் புகார் கூறப்பட்டது.
அவரது வீடுகளில், 7.9.2006-ல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (61), அவரது மனைவி ஜெயகாந்தி (53), சகோதரர்கள் சிவானந்தன் (48), சண்முகானந்தன் (45), மகன்கள் அனந்த பத்மநாபன் (34), அனந்த ராமகிருஷ்ணன் (32), அனந்த மகேஸ்வரன் (33) ஆகிய 7 பேர் மீதும், வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4.90 கோடிக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேருக்கும், ஆகஸ்ட் 30-ம் தேதி குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. எனவே, தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி கே. வெங்கடசாமி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கில் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ. 2.07 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி வைக்க தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், வருமானத்தை மீறி சேர்த்த சொத்துகளை விற்று விடாமல் தடுக்கும் நோக்கத்தில், அவற்றை முடக்கி வைக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் தாக்கல் செய்த மனு மீது தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம், இம்மாதம் 4-ம் தேதி இந்த உத்தரவை பிறப்பித்தது.