நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் வரும் பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் திருச்சியில் மாநாடு நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் 92-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் வியாழக்கிழமை மாலை திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: அண்ணா காலத்தில் தேர்தலில் திமுக போட்டியிடலாமா? வேண்டாமா? என்பது குறித்து, திருச்சியில்தான் கருத்து கேட்டு முடிவு செய்தோம். திருச்சி கூட்டங்கள் எப்போதும் நம்மை கைவிட்டதில்லை.
எனவே, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற திமுக நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் வரும் பிப்ரவரி 15 மற்றும் 16 தேதிகளில் திருச்சியில் திமுக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.