திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த 13-ம் தேதி மழை தூறியது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் காற்று, இடி, மின்னலுடன் மழை கொட்டியது.
அதனால் மழை நீருக்காக அமைக்கப்பட்ட தடுப்பணைகளில் சிலவற்றில் நீர் நிரம்பியது. உடுமலையில் இருந்து அமராவதி செல்லும் சாலையில் உள்ள கொங்கலக்குறிச்சி கிராமத்தில் உள்ள தடுப்பணை நிரம்பி காணப்பட்டது.
அதனை அடுத்துள்ள ஆலாம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதில் அங்கு நடவு செய்யப்பட்டுள்ள 8100 வாழை மரங்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ‘சுமார் 8100 வாழை மரங்கள் மழைக்கு சேதமாகியுள்ளன’ என தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.