தமிழகம்

கோவை: பள்ளிக்கு 100 வயது... மாணவர்களுக்கு 50!

செய்திப்பிரிவு

எந்திர உலகம். மிக சீக்கிரமே எல்லாம் ஓடி விடுகின்றன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் சந்திப்புகளை வழியிலேயே விட்டுச் சென்றுவிடுகிறோம். என்றாவது ஒருநாள் பார்த்தால், எங்கேயோ பார்த்த முகமாக, ஞாபகப்படுத்தக் கூட நேரமிருப்பதில்லை.

இன்றைய சூழலில், 50 வருடங்களுக்கு முன் பள்ளியில் பார்த்து பழகி, ஒன்றாய் அமர்ந்து, படித்த முகங்கள் நினைவில் நிற்பது சாத்தியமா? அப்படி அவை நினைவில் இருந்தால், எவ்வளவு இன்பமாக இருக்கும்?

பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டு, அவர்கள் அனைவரும் பேசுவது எந்தவொரு நவீன தலைமுறையையும், வாய்பிளந்து பார்க்க வைத்துவிடும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான், கோவை சபர்பன் பள்ளியில் நடைபெற்றது.

1913 ஆம் ஆண்டு, ராம்நகரில் இருந்த மொத்த குடியிருப்புகளும் இணைந்து துவங்கியது தான், சபர்பன் சொசைட்டி. முதலில் துவக்கப்பள்ளி, பின்னர் உயர்நிலைப்பள்ளி என மாற்றமடைந்து, இன்று மேல்நிலைப்பள்ளியாக, கோவையிலேயே தனக்கான பாரம்பரியத்துடன் திகழ்கிறது.

நூறு வருட பிறந்தநாளை, இந்த ஆண்டு கொண்டாடியது, ஒரு பள்ளியின் பெருமை என்றால், அங்கு 50 வருடங்களுக்கு முன்பு பயின்ற, முன்னாள் மாணவர்கள் இன்னாள் மாணவர்களாக, விழாவுக்கு வந்திருந்து, சிறப்பித்தது மேலும் ஒரு பெருமை. 1963 ஆம் ஆண்டு, தங்களது எஸ்.எஸ்.எல்.சி., படிப்பை முடித்த 79 நண்பர்கள் ஒன்றாய் இணைந்து, தங்களது பள்ளி நினைவுகளையும், குடும்ப வாழ்க்கையையும் ஒருவர் மாறி ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

பிளாஷ்பேக் காட்சிகள் போல, ஒவ்வொருவரும் தங்களது வகுப்பறைகளில், அதே சிறுவயது மாணவ, மாணவிகளாக மாறிய தருணங்கள், விட்டுக் கொடுத்து, சண்டையிட்டு, தேர்வெழுதி கழித்த காலங்களை, ஏதோ நேற்று நடந்தவையாக சிலாகித்து மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெயகுமார் கூறியதாவது:

பள்ளிக்கு நூறு வயது. அதன் மாணவர்களான எங்களுக்கு, இங்கு பயின்று 50 வயதாகிறது. சபர்பன் சொசைட்டியே, எங்களை இந்த அளவிற்கு வளர்த்துள்ளது. கோவையில் சபர்பன் பள்ளி என்றால், இன்றும் பெருமையாக கருதப்படுகிறது. காரணம் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த எங்களில் பெரும்பாலானோர், பல உயர்ந்த பதவிகளில் உள்ளனர்.

விழாவுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் இருந்து, முன்னாள் மாணவர்கள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும், அந்த ஓர் ஆண்டில் படித்தவர்கள். இதேபோல, நூறு ஆண்டுகளில் படித்து முடித்துச் சென்ற இப்பள்ளி மாணவர்கள் உலகம் முழுவதும் பரவி இருப்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விழாவுக்கு எங்கள் வகுப்பில் படித்த 151 பேரையும் அழைக்க முடியவில்லை என்பது வருத்தமான விஷயம். இதில், எங்களுக்கு தெரிந்து 14 பேர், இன்று உயிருடன் இல்லை. 79 பேரை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது.

இந்த ஒரே நாள் தான், அத்தனை வருட நினைவுகளை எங்களிடம் மீட்டுக் கொண்டு வந்தது என்றார் மகிழ்ச்சி ததும்ப.திரைப்படங்களில் மட்டுமே அதிகம் பார்த்து வந்த பிளாஷ்பேக் நமது வாழ்விலும் நிச்சயம் நனவாகும். ஒருவேளை நீங்களும் பழமையை மறவாமல் இருந்தால். இது இந்த 79 முன்னாள் மாணவர்களின் அனுபவ மொழி.

SCROLL FOR NEXT