தமிழகம்

கருணாநிதி தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விருப்பம்

செய்திப்பிரிவு

“கருணாநிதி தலைமையில் மக்களவைத் தேர்தலில் 3-வது அணி அமைக்க விரும்புகிறோம்” என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான கே.எம்.காதர் மொய்தீன் கூறினார்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது :

ஜனநாயகம், சமய சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்கும் அரசியல் சக்திகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. தமிழகத்தில் அத்தகைய கொள்கைகளில் உறுதிகொண்ட தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து வருகிறோம்.

பாரதிய ஜனதா கட்சி, எங்களுக்கு விரோதி கிடையாது. ஆனால், கிராம ராஜ்ஜியம் பற்றி பேசுவதற்கு பதிலாக, ராம ராஜ்ஜியம் பற்றி மோடி பேசி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கையில் அவர் எங்களிடம் இருந்து முரண்படுகிறார்.

அண்மையில், 4 மாநிலத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற காரணம், அவை ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சி தோன்றிய இடங்களாகும்.

ஆனால், மற்ற மாநிலங்களில் அவர்களின் கனவு பலிக்காது. டெல்லியில் மக்கள் காங்கிரஸையும், பாரதிய ஜனதா கட்சியையும் புறம் தள்ளியுள்ளனர்.

ஜனநாயகம், சமூக நீதியைக் காப்பதாகக் கூறிவரும் கேஜ்ரிவாலுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அகில இந்திய அளவில் மாநில கட்சிகள் அடங்கிய 3-வது அணிதான் ஆட்சியைப் பிடிக்கும்.

கருணாநிதியை பொறுத்தவரை அவர், ‘காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை’ என அறிவித்துவிட்டார். நட்பு என்றாலும், பகை என்றாலும், அவர் தெளிவாக இருப்பார். கருணாநிதி தலைமையில் மக்களவைத் தேர்தலில் 3-வது அணி அமைய விரும்புகிறோம்.

தமிழகத்தில், 55 லட்சம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இதில், 4 எம்.பி. தொகுதி களாவது முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்றார் அவர்.

SCROLL FOR NEXT