பருவமழை தொடங்குவதற்கு முன்பே மாநிலம் முழுவதும் சாலைகள் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கன மழையால் மாநில, மாவட்ட, நகர்புற சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. பல இடங்களில் சிறிய பாலங்களும் சேதமடைந்தன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, சாலைகள் மற்றும் மேம்பாலங்களை சீரமைக்க தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு பருவ மழை நெருங்கி வருகிறது. மழை தொடங்குவதற்கு முன்பே சாலை பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநில நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு பெய்த கன மழையால் மாநிலம் முழுவதும் சாலைகள் சேதமடைந்தன. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. இந்த மாவட் டங்களில் உடனடி தேவைக்காக மட்டுமே ரூ.150 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆண்டு பருவ மழை தொடங்க உள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பல்வேறு பணிகளை மேற் கொண்டு வருகிறோம். மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள 11 ஆயிரம் கி.மீ. சாலை களை பராமரிக்கும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என 40 மண்டல அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.
9 ஆயிரம் பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர். சாலை ஓரம் வளர்ந்துள்ள செடிகள், மழைநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றுதல், மழைநீர் தேங்காமல் இருக்க சாலைகளில் இருக்கும் பள்ளம் மேடுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.