தமிழகம்

எரிவாயு திட்டத்தை கைவிடக் கோரி வடகாட்டில் நூதன போராட்டம்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாகக் கைவிட வேண்டும். வடகாட்டில் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ள ஆழ்துளைக் கிணறை மூட வேண்டும் என வலியுறுத்தி வடகாட்டில் 6-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.

வடகாடு மற்றும் சுற்றுவட்டாரத் தைச் சேர்ந்த விவசாயிகள் கலப்பை, மண்வெட்டிகளுடன், கையில் தட்டுகளை ஏந்தி, கருப்புத் துணியை கண்களில் கட்டிக் கொண்டு கடைவீதியில் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தங்களது தோட்டங்களில் விளைந்த கடலை, சோளம், கரும்பு போன்ற வேளாண் விளைபொருட்களையும் கொண்டு வந்திருந்தனர்.

பெண்கள் கும்மி அடித்தும், ஒப்பாரி வைத்தும் தங்களது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரி வித்தனர்.தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு இறுதிச் சடங்கு செய்தும் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து போராட்டக் குழு வினர் கூறியதாவது: நெடுவாசலில் எரிவாயு எடுக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக நெடுவாசலில் நடைபெற்ற போராட்டம் நேற்று முன்தினம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எனினும், வடகாட்டில் போராட்டம் தொட ரும்.

மேலும், வடகாட்டில் எரி பொருள் சோதனைக்காக அமைக் கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு களை மூடுவதுடன், அதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங் களை உரிய விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

இங்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளைக் கடந்த நிலையில், தற்போது அங்கு மின் இணைப்பு பெறும் நடவடிக்கையில் எண்ணெய் நிறுவன அலுவலர்கள் ஈடுபட்டி ருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

          
SCROLL FOR NEXT