பிரபல மகப்பேறு மருத்துவர் கீதா அர்ஜுன் எழுதிய ‘ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி’ (தமிழாக்கம்) வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எம்சிடிஎம் சிதம்பரம் செட்டியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடந்தது.இந்த விழாவுக்கு மருத்துவர் கீதா அர்ஜுன் தலைமை தாங்கினார்.
புத்தகத்தை தமிழாக்கம் செய்த ஹேமா நரசிம்மன், திருமகள் நிலையம் பதிப்பகத்தைச் சேர்ந்த டி.திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.இந்த விழாவில் மருத்துவர் கீதா அர்ஜுன் பேசியதாவது:‘ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி’ புத்தகம் ஆங்கிலத்தில் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த புத்தகத்தின் தமிழாக்கம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் கருத்தரிப்பதற்கு முன்பு, மருத்துவரிடம் பெற வேண்டிய ஆலோசனைகள் முதல் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை கவனமாக கையாள வேண்டிய வழிகள் வரை பல்வேறு விஷயங்கள் மற்றும் சந்தேகங்கள் தனித்தனி அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன.
கருத்தரித்த முதல் வாரம் தொடங்கி, குழந்தை பிறப்பது வரையில் ஒவ்வொரு வாரமும் தாயின் உடலிலும், கருவில் உள்ள குழந்தைக்கும் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றுடன் கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு செய்ய வேண்டிய பல்வேறு பரிசோதனைகள் பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன. மேலும் தாய்க்கும், குழந்தைக்கும் ஏற்படக்கூடிய உடல் ரீதியான மற்றும் உள ரீதியான தேவைகளும் மிக கவனமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் மனைவிக்கு மட்டுமின்றி கணவருக்கும் உதவியாக இருக்கும் என்றார்.விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், “மருத்துவர் கீதா அர்ஜுன் தன்னுடைய 32 ஆண்டுகால அனுபவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் ஆங்கிலத்தில் நன்றாக விற்பனையாகிறது. தமிழ் பேசும் தம்பதிகளுக்காக தற்போது தமிழில் வெளிவந்துள்ளது. இந்த புத்தகம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்றார்.இந்த விழாவை பேச்சாளர் பாரதி பாஸ்கர் தொகுத்து வழங்கினார். டாக்டர் அர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.