தமிழகம்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பவுர்ணமி தினத்தில் ‘நிலா பள்ளி’: கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதுமையான முயற்சி

இ.மணிகண்டன்

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பவுர்ணமி தினத்தில் ‘நிலா பள்ளி’ நடத்தும் புதுமையான முயற்சி விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் பணிக்குச் செல்லும் குழந் தைகளைக் கண்டறிந்து, அவர் களை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மூலம் மீட்டு சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். 3 ஆண்டுகள் தொடர்ந்து சிறப்புப் பள்ளிகளில் கல்வி பயிற்றுவிக்கப் பட்டுப் பின்னர், வழக்கமான முறைசார் பள்ளிகளில் சேர்க்கப் படுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத நிலையை அடையும் நோக்கில் நடத்தப்படுவதே ‘நிலா பள்ளி’.

பெற்றோரை உற்சாகப்படுத்தி, குழந்தைகளுக்கு ஆர்வமூட்டி பள்ளிக்கு வரவழைப்பதே நிலா பள்ளியின் முக்கிய நோக்கம். பொது மக்கள், தொழிற்சாலை உரிமை யாளர்கள், சுயஉதவிக் குழு உறுப் பினர்கள் உட்பட அனைத்துத் தரப் பினரையும் கல்வியின் அவசியம் குறித்து சிந்திக்க வைக்கும் வகையில் நிலா பள்ளி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன் றும் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பெற்றோர், ஊர் மக்கள் மத்தியில் குழந்தைகளின் திறமைகளை அரங்கேற்றும் இடமே நிலா பள்ளி. மாணவர் சேர்க்கை, இடை நிற்றல், கற்றலின் இனிமை ஆகியவற்றை விளக்கிக் கூறும் களமாக நிலா பள்ளி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கடந்த பவுர்ணமி நாளன்று விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் சார்பில் திருத்தங்கல் சிறுவர் பூங்காவில் நிலா பள்ளி நடைபெற்றது. இதில், குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

மாணவ, மாணவிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட் டன. இதன்மூலம் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் நிலா பள்ளிகள் நடத்தத் திட்ட மிட்டுள்ளோம். நிலா பள்ளி தொடங்கும் முன் அப்பகுதியில் குழந்தைகள் பங்கேற்கும் கல்வி விழிப்புணர்வு பேரணியும் நடத்தப் படும். குழந்தைகளின் பாடல், நாடகங்கள், நடனங்களுடன் நிலா பள்ளி தொடங்கப்படும்.

மேலும், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பொது அறிவு வினாடி-வினா, புதிர் போட்டி கள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும். புத்தக வாசிப்பும் உண்டு. மாணவ, மாணவிகளுக்கு மட்டுமின்றி பெற்றோரின் திறமை களை வெளிப்படுத்தவும் வாய்ப்பு கள் வழங்கப்படும். அவர்களுக்கு எழுத்தறிவு வகுப்பு நடத்தப்படும்.

சுயஉதவிக் குழு உறுப்பினர் கள், கல்விக் குழு உறுப்பினர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், பெற்றோர் தங்களது கருத்துகளைக் கூறவும் வாய்ப்பு அளிக்கப்படும். இதன் மூலம் குழந்தைத் தொழி லாளர் முறை இல்லாத நிலையை அடைய முடியும் என்றார்.

SCROLL FOR NEXT