தமிழகம்

தவறான வாட்ஸ்அப் தகவலால் நாகையில் திரண்ட இளைஞர்கள்

செய்திப்பிரிவு

நாகப்பட்டி னத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்துக்கு நேற்று முன்தினம் இரவு முதல் ஏராளமான இளைஞர்கள் வந்த வண்ணம் இருந்தனர். ஆங்காங்கே கிடைக் கும் இடத்தில் படுத்து தூங்க ஆரம்பித்தனர்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர் களிடம் தொழிற்பயிற்சி மையக் காவலாளி, இங்கு எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் முகாம் நடைபெற உள்ளதாக தகவலறிந்து வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து காவலாளி, இங்கு எந்த ஆள்சேர்ப்பு முகாமும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். வாட்ஸ்அப்-பில் எங்களுக்கு தகவல் வந்தது என்று கூறிய இளைஞர்களில் பலர் இரவு அங்கேயே தங்கினர்.

அப்போது தங்களுக்கு வந்த வாட்ஸ் அப் தகவலை அவர்கள் காட்டினர். அதில், ஜூன் 4-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை நாகப் பட்டினம் தொழிற்பயிற்சி மைய விளையாட்டுத் திடலில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது, கடந்த ஆண்டு இதே தேதிகளில் இங்கு நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமுக்கான அறிவிப்பு என்பதை அந்த இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

தவறான தகவலை உண்மை என நம்பி, ஆர்வமுடன் வந்த இளைஞர்கள் ஏமாற்றத்துடன் நேற்று காலை தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

SCROLL FOR NEXT