கோவை கருமத்தம்பட்டியில் கடந்த ஆண்டு மே 5-ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ், அவரது மனைவி சைனா, அனூப், வீரமணி, கண் ணன் ஆகிய 5 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, போலி ஆவணம் மூலமாக சிம் கார்டு வாங்கியதாக, ரூபேஷ் மீது 14 வழக்குகளும், அவரது மனைவி சைனா மீது 6 வழக்குகளும், கண்ணன் மீது 2, வீரமணி, அனூப் மீது தலா ஒரு வழக்கும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டு வாங்கியதாக, மாவோயிஸ்ட் தம்பதி ரூபேஷ், சைனா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு, திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வழக்கை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து, மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் உத்தரவிட்டார்.