தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மேற்கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக ‘தி இந்து’வுக்கு தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருது வழங்கப்பட்டது.
உலக அளவில் இணைய இதழியல் துறையில் (டிஜிட்டல் பப்ளிஷிங்) புதுமைகளை புகுத்தும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் வேன்-இஃப்ரா (WAN-IFRA) மற்றும் கூகுள் சார்பில் டிஜிட்டல் மீடியா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
5 பிராந்தியங்கள்
தெற்கு ஆசியா, ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா என 5 பிராந்தியங்கள் வாரியாக இந்த விருது வழங்கப்படுகிறது. சிறந்த செய்தி இணையதளம், டிஜிட்டல் விளம்பர பிரச்சாரம், ஆன்லைன் வீடியோ, லைப் ஸ்டைல் இணையதள சேவை, வாசகர் பங்கேற்பு (ரீடர் என்கேஜ்மென்ட்) என்பன உட்பட 9 பிரிவுகளின் கீழ் தெற்கு ஆசிய பிராந்திய விருதுகள் வழங்கப்படுகின்றன.
கொல்கத்தாவில்..
கொல்கத்தாவில் கடந்த 21, 22-ம் தேதிகளில் நடைபெற்ற விழாவில் 2016-ம் ஆண்டுக்கான தெற்கு ஆசிய டிஜிட்டல் மீடியா விருதுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சிறந்த வாசகர் பங்கேற்பு பிரிவில் (ரீடர் என்கேஜ்மென்ட்) ‘தி குயின்ட்’ செய்தி இணையதளம் தங்கப்பதக்கத்தை வென்றது. ‘ஆஸ்க் அஸ்வின் கன்டஸ்ட்’ என்ற போட்டிக்காக ‘தி இந்து’ குழுமத்தின் ‘ஸ்போர்ட்ஸ்டார் லைவ் டாட் காம்’ வெள்ளிப் பதக்கத்தை தட்டிச்சென்றது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மேற்கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக ‘தி இந்து’ (தமிழ்) டாட் காம், வெண்கல பதக்கத்தை வென்றது.