தமிழகம்

வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதாக புகார்: அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு - வழக்கறிஞர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

செய்திப்பிரிவு

வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் கடந்த 7-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மத்திய போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வீட்டுக்குள் நுழைந்து வருமான வரித்துறையினரின் சோதனைக்கு இடையூறு செய்ததாக தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், சென்னை வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் முரளி, சென்னை பெருநகர காவல் ஆணையர் கரன் சின்ஹாவுக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பினார். அதில் கூறியதாவது:

“அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, போலீஸ் பாதுகாப்பை மீறி அமைச்சர்கள் வீட்டுக்கு உள்ளே நுழைந்து எங்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர். சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை மிரட்டினர். ஆதாரங்களை அழிக்கும் விதத்தில் செயல்பட்டனர். இந்த செயல்களில் ஈடுபட்ட தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, கார் ஓட்டுநர் உதயகுமார் ஆகியோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

வருமான வரித்துறையினரின் புகார் குறித்து கூடுதல் ஆணையர் சங்கர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு அபிராமபுரம் காவல் நிலையத்துக்குட்பட்ட எல்லையில் வருகிறது. இதனால் அபிராமபுரம் காவல் நிலையத்துக்கு இந்த புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு எடுக்க, அரசு வழக்கறிஞர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

புகாரில் கூறப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்ய, போலீஸார் முடிவு செய்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT