சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக்குழுத் தலைவருமான சீதாராம் யெச்சூரி மீது சங்பரிவார் அமைப்பினர் நடத்தியுள்ள தாக்குதலுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அக்கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது நிகழ்ந்துள்ள இந்தத் தாக்குதல், ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை உறுதி செய்துள்ளது.
ஒரு கட்சியின் அலுவலகத்துக்கு உள்ளேயே நுழைந்து இப்படியொரு தாக்குதல் நடத்தும் சுதந்திரத்தை சங்பரிவார அமைப்புகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அளித்து, அதை ஊக்கப்படுத்துவதும், வேடிக்கைப் பார்ப்பதும் மிகுந்த வேதனைக்குரியது.
கருத்துக்கு மாற்றுக் கருத்து என்பதில் நம்பிக்கை இல்லாத இப்படிப்பட்ட சங்பரிவார அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்றத் தாக்குதல்களில் ஈடுபட்டு, ஆணவப் போக்கில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.
சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற தாக்குதல்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.