தமிழகம்

எஸ்.ஐ. காளிதாஸ் சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற எச்.ராஜா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ராமநாதபுரத்தில் விசாரணைக் கைதி சையது முகம்மதுவை காவல் நிலையத்தில் சுட்டுக் கொன்ற எஸ்.ஐ. காளிதாஸ் மீதான சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியாக இருந்த சையது முகம்மது, போலீஸ் எஸ்.ஐ. காளிதாஸை கத்தியால் குத்த முயன்றார். அப்போது, தற்காப்புக்காக சையது முகம்மதுவை தனது துப்பாக்கியால் காளிதாஸ் சுட்டுக் கொன்றுள்ளார். இதில் தவறேதும் இல்லை. இதற்காக, காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துவது நியாயமற்றது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு பஸ்களை வழிமறித்து முஸ்லிம்கள் தாக்கியுள்ளனர். குறிப்பாக பஸ்ஸில் இருந்த இந்துக்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சையதுவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்பு, அதை வாங்க மறுத்து மாவட்டம் முழுவதும் கலவரத்தில் ஈடுபட சிலர் முயற்சித்துள்ளனர்.

சையது மீது அவரது ஜமாத் சார்பில் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கூறப்பட்டுள்ளது. அதோடு, அவர் மீது சில வழக்குகளும் பதிவாகியுள்ளன. எனவே, அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்தது எப்படி தவறாகும்?

இந்த சம்பவத்துக்காக எஸ்.ஐ. காளிதாஸை பணியிடை நீக்கம் செய்திருப்பது தவறான செயல். அவரை உடனடியாக பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT