தமிழகம்

மியூசிக் அகாடமி விழாவில் கலைஞர்களுக்கு விருது: பள்ளிப் பாடத்தில் இசையை சேர்த்தால் பல சாதனையாளர்களை உருவாக்கலாம் -அமெரிக்க பேராசிரியர் மஞ்சுள் பார்கவா கருத்து

செய்திப்பிரிவு

பள்ளி பாடத்திட்டத்தில் இசையை சேர்ப்பதன்மூலம், பல துறைகளிலும் சாதனையாளர்களை உருவாக்க முடியும் என்று அமெரிக்க கணிதப் பேராசிரியர் மஞ்சுள் பார்கவா கூறினார்.

புத்தாண்டின் முதல் நாளான நேற்று முன்தினம் சென்னை மியூசிக் அகாடமியின் ‘சதஸ்’ நிகழ்ச்சி நடந்தது. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர் மஞ்சுள் பார்கவா, விழாவுக்கு தலைமை தாங்கினார்.

பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞர் சஞ்சய் சுப்பிரமணியனுக்கு ‘சங்கீத கலாநிதி விருது’, வித்வான் டி.ஹெச்.சுபாஷ் சந்திரன், பாடகி மைசூர் ஜி.என்.நாகமணி ஸ்ரீநாத்துக்கு ‘சங்கீத கலா ஆச்சார்யா விருது’, நாதஸ்வரக் கலைஞர் சேஷம்பட்டி டி.சிவலிங்கம், வீணை கலைஞர் கமலா அஸ்வத்தாமாவுக்கு (உடல் நலம் சரியில்லாததால் வரவில்லை) ‘டிடிகே விருது’, கவுரி குப்புசாமிக்கு ‘இசை ஆய்வறிஞர் விருது’ ஆகியவற்றை மஞ்சுள் பார்கவா வழங்கினார். அவர் பேசியதாவது:

கி.மு. 200-ம் ஆண்டை சேர்ந்த நாட்டிய சாஸ்திரம், சங்கீத ரத்னாகரம் ஆகிய நூல்களில் இசை, நாட்டியத்தில் பல்வேறு விதமான கணித நுட்பங்கள் வெளிப் படுவதைப் பார்க்கமுடிகிறது. கணிதத்தின் ஆழமான நுட்பங்களை தன்னுள் கொண்டிருக்கும் கலை வடிவங்கள்தான் இசையும் நாட்டி யமும்.

உலகப்புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸிடம் ஒருமுறை, ‘தங்களது மெகின்டோஷ் தயாரிப்புகளுக்கு உலக அளவில் பெரிய வரவேற்பு கிடைப்பதற்கு என்ன காரணம்?’ என்றனர். அதற்கு அவர், ‘‘கணிப் பொறி தொழில்நுட்பத்தோடு, கலையிலும் சிறந்திருப்பவர் களையே நாங்கள் வேலைக்கு எடுக்கிறோம். அவர்களது கற்ப னைத் திறன் எங்கள் படைப்புகளில் வெளிப்படுகிறது’’ என்றாராம்.

பள்ளியிலேயே இசையை ஒரு பாடமாக படித்தால் சிறந்த கலைஞர்கள் மட்டுமல்லாது, நீதி யரசர்கள், மருத்துவர்கள், கணித மேதைகள், சிறந்த மனிதநேயம் உள்ளவர்கள் என பல சாத னையாளர்கள் நாட்டுக்கு கிடைப் பார்கள்.

இவ்வாறு மஞ்சுள் பார்கவா கூறினார்.

முன்னதாக, வரவேற்புரை நிகழ்த் திய மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி, ‘‘மிகக் குறைந்த வயதில் கணிதத் துறையில் பல சாதனை களை செய்துள்ள மஞ்சுள் பார் கவாவிடம் இருந்து மிகக் குறைந்த வயதில் சங்கீத கலாநிதி விருதை சஞ்சய் சுப்பிர மணியன் பெறுவது மிகவும் பொருத்தமானது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இசைக் கலைஞர்களுக்கும் உதவிகள் வழங்கப்படும்’’ என்றார். ‘சங்கீத கலாநிதி’ விருது பெற்ற சஞ்சய் சுப்பிரமணியன் ஏற்புரை நிகழ்த்தினார். விருது பெற்ற கலைஞர்களை இசை ஆய்வறிஞர் பி.எம்.சுந்தரம் பாராட்டிப் பேசினார்.

SCROLL FOR NEXT