தமிழர்களின் தொன்மை வரலாறு, நகர, நாகரிகம் குறித்து மத்திய தொல்பொருள் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் கீழடியில் இன்று (சனிக்கிழமை) மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
காலை 10.30 மணிக்கு பூஜை போடப்பட்டு, பணிகள் தொடங்கின. பூஜையில் தொல்லியலாளர்களோடு, உள்ளூர் மக்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
தொல்லியல் குழுவினருடன் 15 பணியாளர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் வரை அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய இரண்டு கட்ட அகழாய்வுகளில் 5,300 தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத் தமிழர்களின் தொன்மை வரலாறு, நகர, நாகரிகம் குறித்து சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ.39 லட்சம் மதிப்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன் மற்றும் கல்லூரி மாணவர்கள் அகழ்வாய்வில் ஈடுபட்டனர். முதலா மாண்டு 43 குழிகள் தோண்டப்பட்டன. இதில் 1,800 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. 2016-ல் (இரண்டாமாண்டு) ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ.45 லட்சம் மதிப்பில் 59 குழிகள் தோண்டப்பட்டன. அப்போது ஏற்கெனவே உள்ள குழுவினரோடு துணைக் கண்காணிப்பாளர் நந்தா கிஷோர் ஸ்வைன் சேர்ந்து அகழ் வாய்வுப் பணி மேற்கொண்டார். இதில் சுமார் 3,800 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன.
5,300 தொல்லியல் பொருட்கள்
இரண்டாம்கட்ட அகழாய்வில் தமிழகத்தில் முதல்முறையாக நகர நாகரிகம் இருந்ததற்கு ஆதாரமாக நிறைய கட்டிடங்கள் கிடைத்தன. இதன் மூலம் இலக்கியங்களில் இருந்த குறிப்புகள் உறுதி படுத்தப்பட்டன. சுமார் 110 ஏக்கர் பரப்பளவு உள்ள தொல்லியல் மேட்டில் ஓர் ஏக்கர் பரப்பளவில் 102 அகழ் வாய்வுக் குழிகளில் 5,300 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன.
மூன்றாம்கட்ட அகழாய்வு பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது. இதனால் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. இதற்கு, 2 ஆண்டுகள் நடை பெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடப்பதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா விளக்கம் அளித்தார். கடந்த ஜனவரி மாதம் ஆய்வறிக்கையும் அனுப்பிவைக்கப்பட்டது.
அதிகாரி திடீர் பணியிட மாற்றம்
இதை ஆய்வு செய்த மத்திய தொல்லியல் கழகம் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி மூன்றாம்கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்கு அனுமதி அளித்தது. மார்ச் 17-ம் தேதி ரூ.4.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. ஏப்ரல் 1-ம் தேதி அகழ்வாராய்ச்சி தொடங்க உள்ள நிலையில், கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா திடீரெனப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் புராதனச் சின்ன பராமரிப்பு துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், கீழடி அகழ்வாய்வுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரின் தலைமையில் கீழடியில் இன்று(சனிக்கிழமை) மூன்றாம் கட்ட அகழாய்வு தொடங்கியுள்ளது.