கோயில்களில் உள்ள யானை கள், மாடுகள், அதன் குட்டிகள் உரிய முறையில் பராமரிக்கப் படுகின்றனவா, இல்லையா என்பதை ஆய்வு செய்ய மாநில அளவில் குழு அமைக்கப் பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கோயில்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் மாடுகள், அதன் கன்றுக்குட்டிகள், யானைகள் ஆகியன உரிய முறையில் பராமரிக் கப்படுவதில்லை. திருவண்ணா மலை கோயிலில் இறந்த மாடுகளை கோயில் வளாகத்திலேயே எரித்துள்ளனர். யானைகளுக்கு தினமும் 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால், ஒரு வாளி அளவுக்கே தண்ணீர் தருகின்றனர்.
இதனால், அண்மையில் 3 கோயில் யானைகள் இறந்துள்ளன. கோயில்களில் உள்ள விலங்குகளை பராமரிக்க ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதிடும்போது, ‘‘வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, கோயில் யானைகளைப் பராமரிக்க கோயில் நிர்வாகத்தினரால் முடியுமா? என்பதை வன அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே, விலங்குகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். வனப்பகுதியில் சிக்கும் யானைகளின் உடலில் ‘ஷிப்’ (கண்காணிப்பு கருவி) பொருத் தினால், அந்த யானை எங்கெல் லாம் செல்கின்றன என்பதை கண்காணிக்க முடியும். அத்தகைய வசதிகள் வனத்துறையினரிடம் இல்லை. மேற்கண்ட வசதியை உருவாக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும். கோயிலில் உள்ள விலங்களின் பராமரிப்பை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அவசியம்” என்றார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் வாதிடும் போது, “கோயில் விலங்குகள் பராமரிப்பைக் கண்காணிக்க மாநில அளவில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட அளவிலும் இதுபோன்ற குழுக்கள் அமைக்க 2 மாத கால அவகாசம் வேண்டும்’’ என்றார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுகின் றனவா? என்பதை வனத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். உடல்நலக் குறைவாக இருந்த திருவிடை மருதூர் கோயில் யானை, சிகிச்சைக்கு பின்னர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த யானை இப்போது எப்படி இருக்கிறது? என்பதை விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை அக்டோபர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.