தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் திட்டப்படி பாரத மாதா கோயில் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் குமரி அனந் தன் நேற்று திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதி யைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, சிறையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி தொழுநோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் ஆதரவின்றி தவித்த அவர் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பாரத மாதாவுக்கு கோயில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டார். இதற்காக சுதந்திர போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் மூலம் பாப்பாரப்பட்டியில் அடிக்கல் நாட்டினார். பாரத மாதா சிலை ஒன்றையும் வடிவமைத்து தயார் நிலையில் வைத்திருந்தார். கோயில் அமைப்பதற்குள் அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பாப்பாரப்பட்டி பகுதியி லேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்பகுதியில் தமிழக அரசு சுப்பிரமணிய சிவாவுக்கு நினைவு மணிமண்டபம் அமைத்துள்ளது.
இந்நிலையில், அதே வளாகத்தில் சுப்பிரமணிய சிவாவின் விருப்பப்படி பாரத மாதா கோயில் அமைக்க வேண்டும் என்று 1977-ம் ஆண்டு முதல், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை வைத்து வருகிறார். இதற்காக பலமுறை நடைபயண போராட்டங்கள் மேற்கொண்டதுடன் நீதிமன்றத்தையும் அணுகினார். நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தபோதும் பாரத மாதா கோயில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கிடப்பில் வைத்துள்ளது.
இந்நிலையில், சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினமான நேற்று பாப்பாரப்பட்டிக்கு வந்த குமரி அனந்தன், சிவா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் திடீரென அதே வளாகத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளத் தொடங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அனைத்துத் தரப்பு மக்களும் வழிபட ஏற்ற வகையில் பாரதமாதா கோயிலை அமைக்க சுப்பிர மணிய சிவா விரும்பினார். அவரது நியாயமான, சீரிய நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக முதல்வர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு விரைவாக பாரத மாதா கோயில் அமைக்க வேண்டும் என்பது ஒன்றே என் கோரிக்கை என்றார்.
பின்னர் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருந்தார். மாலையில், காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்ட முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.