சவுதி அரேபியா கொண்டு வந்திருக்கும் ‘நிதாகத்’ சட்டத்தால் லட்சக்கணக்கான தமிழர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் குறைந்தது 10 சதவீத தனியார் பணியிடங்களில், சவுதி அரேபியர்களைப் பணியமர்த்தும் வகையில், ‘நிதாகத்’ என்னும் சட்டத்தினை, சவுதி அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டப்படி, சட்ட விரோதமாக சவுதியில் தங்கி பணியாற்றி வரும் வெளிநாட்டவரை, வெளியேற்றும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது.
சட்ட விரோதமாக தங்கியவர்கள் தாங்களாகவே வெளியேறும் வகையில் சவுதி அரசாங்கம் 3 முறை காலக்கெடு விதித்தது. நவம்பர் 3-ம் தேதியுடன் இறுதிக் கெடு முடிந்ததால், சவுதி அரசாங்கம் தற்போது கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து, த.மு.மு.க., தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, 'தி இந்து'விடம் கூறியதாவது:
சவுதியில் நிதாகத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் வேலைவாய்ப்பை இழப்பார்கள். கைது நடவடிக்கைக்கு ஆளாகாமல் அவர்ளை மீட்டு வர, தனிக்குழுக்களை தமிழக அரசு அமைக்க வேண்டும். சிறப்பு விமானங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்துப் பேச முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.