சென்னை துறைமுகம், மதுரவாயில் இடையே 19 கி. மீ, தொலைவுக்கு பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அமல்படுத்திட சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள அனுமதியை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தது.
வழக்கறிஞர் பி.பாலாஜி இந்த மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் தமிழக அரசு தொடக்கத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்தது. கூவம் ஆற்றங்கரையின் ஒரு பக்கத்தை பறக்கும் சாலை அமைத்திட பயன்படுத்தலாம் என அரசு ஆணை ஒப்புதல் கொடுத்தது. அரசாணை எண் 199ன்படி சாலை அமையும் பாதைக்கு பொதுப்பணித்துறை ஒப்புதல் தரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கூவம் ஆற்றங்கரையோரத்தில் பறக்கும் சாலை அமைக்கப் படவேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் ஒப்புதல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் பிறப்பிக்கப்பட்டது.
எந்த தருணத்திலும் கூவத்தின் நீரோட்டத்துக்கு தடை ஏற்படக்கூடாது என்கிற குறிப்பிட்ட நிபந்தனைக்குட்பட்டே அந்த ஒப்புதல் தரப்பட்டது.
திட்ட விவரத்தில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டால் அது பற்றி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் ஒரு நிபந்தனை,
இந்த நிபந்தனைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஸ்பர்டாங்க் ரோடு, கல்லூரி சாலை அருகே கரையோரத்தில் அல்லாமல் ஆற்றுப்படுகையின் உள்ளே 32 தூண்களை அமைத்துள்ளது, கூவம் ஆற்றின் உள்ளே கூடுதலாக 32 தூண்களை அமைத்துள்ளது தங்கு தடையின்றி நீர் ஓடுவதை தடுத்திடும்.
இதனால் மழைக்காலத்தில் வெள்ளம் கரைபுரண்டோடும் அபாயம் இருக்கிறது. வெள்ள காலத்தில் 25000 கன அடி தண்ணீர் ஓடக்கூடிய இந்த ஆற்றில் தடைகள் இருக்குமானால் கரையில் உடைப்பு ஏற்பட்டு சொத்துகளும் மனித உயிர்களும் பறிபோய் பேரழிவு ஏற்படும்.
2005ல் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டதற்கு இந்த ஆற்றில் இருந்த தடைகளே காரணம்.
பறக்கும் சாலை திட்டம் பொதுநலன் நோக்கிலானது என்றும் எனவே அதை முடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், கூவம் ஆற்றில் கூடுதலாக 32 தூண்களை அமைத்தால் மக்கள் நலன் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகும் என்கிற உண்மையை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
பறக்கும் சாலை அமைப்பதால் பெரிய அளவில் பயனும் இருக்கப் போவதில்லை.
எனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த தீர்ப்பை ரத்து செய்து, இந்த மனு மீது விசாரித்து முடிக்கும் வரையில் இந்த திட்டத்தை அதிகாரிகள் தொடர இடைக்கால தடை விதிக்கவேண்டும், என்றும் மனுவில் தமிழக அரசு கோரியுள்ளது.