திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் இரா.முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் அகவை 94 ல் அடியெடுத்து வைக்கும் நாளில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பெரு மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறது.
சமூகத்தில் மண்டிக்கிடந்த மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, பகுத்தறிவுப் போராட்டத்தில் இணைந்து, அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளை துல்லியமாக மதிப்பீடு செய்து தொடந்து வெற்றிபெற்ற மகத்தான ஆளுமையின் அடையாளம் கலைஞர். நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு சட்டமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் என பல நிலைகளில் 60 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி மக்களாட்சி மாண்புக்கு மாபெரும் பங்களிப்பை செலுத்தியுள்ள சிறப்புக்குரியவர் கலைஞர்.
அண்மைக்கால அரசியல் நிகழ்வில் தன்னை இணைத்துக் கொள்ள முடியாத இடைவெளியை வென்று, கலைஞர் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் மேலும் பல்லாண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்திட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.