தமிழகம்

சென்னை: தரமணியில் புதிய ரேஷன் கடை அமைப்பது எப்போது?

வி.சாரதா

தரமணி பெரியார் நகரிலும் காந்தி நகரிலும் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் ரேஷன் கடை இல்லாமல் அவதிப்படுகின்றனர். தற்போது இருக்கும் ரேஷன் கடைகளுக்கு அப்பகுதியினர் ஒன்றரை கி.மீ. தூரம் வரை நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

தரமணி பெரியார் நகரில் 7000 குடும்பங்களும் காந்தி நகரில் 3000 குடும்பங்களும் உள்ளன. 800 குடும்பங்களுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று விதிகள் இருந்தாலும் இப்பகுதியில் இதுவரை ரேஷன் கடை ஏதும் இல்லை.

இப்பகுதிகள் அமைந்திருக்கும் 180வது வார்டில் மொத்தம் 6 ரேஷன் கடைகள் உள்ளன. அகஸ்தியர் தெருவில் டி.யு.சி.எஸ். (திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம்) நியாய விலைக் கடைகள் இரண்டும், தரமணி பேருந்து நிலையம் அருகில் அமுதம் நியாய விலை கடைகள் நான்கும் உள்ளன. டி.யு.சி.எஸ். கடைகளில் 3900 குடும்ப அட்டைகளும் அமுதம் நியாய விலை கடைகளில் 4000 அட்டைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெரியார் நகரில் வசிப்பவர் தரமணி நூறடி சாலையை கடந்துதான் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் நசீமா கூறுகையில், “போக்குவரத்து அதிகமுள்ள மெயின் ரோட்டை ஒவ்வொரு முறையும் கடந்து செல்வது மிகவும் ஆபத்தாக இருக்கிறது. ஏதாவது பொருள் இல்லை என்றால் மீண்டும் செல்வது மிகவும் கடினமாக உள்ளது” என்றார்.

காந்தி நகரில் வசிக்கும் விஜயகுமாரி கூறுகையில், “அகஸ்தியர் தெருவில் உள்ள ரேஷன் கடைகளில் இட நெருக்கடி காரணமாக சீட்டுப் பெறுபவர்கள் குனிந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் வரிசையில் நிற்கும் முதியவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்” என்றார்.

இது குறித்து 180வது வார்டு கவுன்சிலர் ஜெ.பார்வதி ஜோதி கூறியதாவது:

180வது வார்டில் தாமிரபரணி தெருவில் புதிதாக 2 கடைகள் அமைக்கப்படுகின்றன. கட்டிடம் தயாராக உள்ளது. பொங்கலுக்கு பிறகு திறக்க உள்ளோம்.

பெரியார் நகர் அண்ணா திடலில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிலம் காலியாக உள்ளது. வாரியம் அதனை பொது நிலமாக அறிவித்துள்ளதால், அதை மாநகராட்சி பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ஒரு சத்துணவு கூடமும், மாமன்ற உறுப்பினரின் நிதியில் ஒரு ரேஷன் கடையும் விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தரமணி கிளைச் செயலாளர் எஸ்.குமார் இது குறித்து கூறுகையில், “அகஸ்த்தியர் தெருவில் இருக்கும் ரேஷன் கடைகளைத்தான் தாமிரபரணி தெருவுக்கு மாற்றப்போகிறார்கள். ஆனால் அது இப்போது இருப்பதை விட இன்னும் தூரமான பகுதி. பெரியார் நகரில் ரேஷன் கடை அமைக்க பலமுறை கோரியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT