டிசம்பர் 2-ம் தேதி முதல் கார் ஓட்டுபவர்களும், முன் சீட்டில் இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
கார் ஓட்டுபவர்களும், முன் சீட்டில் இருப்பவர்களும் சீட்பெல்ட் அணியாமல் செல்வதால் சிறிய விபத்துக்களில்கூட பெரும் காயம், உயிரிழப்பு ஏற்படுகிறது. டெல்லி போன்ற நகரங்களில் சீட்பெல்ட் அணியாத கார் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையிலும் இந்த நடைமுறையை கட்டாயமாக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். சென்னையில் 100 இடங்களில் தலா 20 ஆயிரம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். நூறு இடங்களில் விழிப்புணர்வு டிஜிட்டல் போர்டுகளும் வைக்கப் பட்டுள்ளன.
டிசம்பர் 2-ம் தேதி முதல் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பைக்கில் செல்பவர்கள் ஹெல்மட் அணிவது கட்டாயமாக இருப்பதுபோல, சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்படுகிறது. முதல்முறை சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகும் சீட்பெல்ட் அணியாத டிரைவர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.300 அபராதம் செலுத்த வேண்டும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.