தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன், கனிமவள ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோரின் இடைநீக்கம் தமிழக அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு இறுதியில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, தலைமைச் செய லாளராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் மாற்றப்பட்டு, மின்வாரிய தலைவராக இருந்த கு.ஞானதேசிகன் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2016 சட்டப்பேரவை தேர்தல் முடிந்து, முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றது வரை தலைமைச் செயலாளராக ஞானதேசிகன் தொடர்ந்தார். கடந்த ஜூனில் அவர் மாற்றப்பட்டு, முதல்வரின் செயலாளராக இருந்த பி.ராம மோகன ராவ் தலைமைச் செயலரானார். ஞானதேசிகன் தமிழ் நாடு தொழில் வளர்ச்சி நிறுவன (டிட்கோ) தலைவராக நியமிக்கப் பட்டார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் ஞானதேசிகன் திடீரென பணியிடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இவருடன் ‘எல்காட்’ நிறுவன மேலாண் இயக்குநரும், கனிமவள ஆணையருமான அதுல் ஆனந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?
தென்மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று தொடர் பான விசாரணையில், பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க, இரு வரும் ஒத்துழைக்காததால் இடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப் படுகிறது.
மேலும், கனிமவளம் தொடர் பான பல்வேறு அனுமதிகளை வழங்கியதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் தொடர்பிருப்பதால் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாகவும், துறைரீதியான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடவடிக்கை எப்படி?
மாநில அரசை பொறுத்தவரை ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உரிய ஆதாரப்பூர்வமான காரணங்கள் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது. அதேநேரம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை பணியிடை நீக்கம் செய்யும்போது காரணங் களை தெரிவிக்க வேண்டிய தில்லை. நடந்த தவறு அல்லது சம்பவத்தை குறிப்பிட்டு விளக்கம் கோரப்படும். அதன் அடிப்படையில், அடுத்தகட்டமாக துறைரீதியான நடவடிக்கையா, ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையா என்பதை அரசு முடிவெடுக்கும்.
பணியிடைநீக்க உத்தரவைக் கூட 45 நாட்கள் வரை மட்டுமே மாநில அரசால் செயல்படுத்த முடியும். அதன்பின் மத்திய அரசுக்கு தான் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளது. 45 நாட் களுக்குள் அவர் மீதான குற்றச் சாட்டுகள் தொடர்பான குற்ற அறிக்கை அளிக்கப்பட வேண்டும். அதில் அடிப்படை முகாந்திரம் இருக்கும் பட்சத்தில், மத்திய அரசிடம் தெரிவித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஒருவேளை 45 நாட்களுக்குள் குற்ற அறிக்கை அளிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி மத்திய அரசை அணுகி இடைநீக்கத்தை ரத்து செய்யலாம்.
கடந்த காலங்களில் தலை மைச் செயலாளராக இருந்த நம்பி யார், முத்துசாமி ஆகியோரும் பணியிடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். கடந்த திமுக ஆட்சி யில் உமாசங்கர் என்ற ஐஏஎஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப் பட்டார். ஆனால், 45 நாட்களில் அவர் மீதான குற்றச்சாட்டை தெரிவிக்காததால் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.