தமிழகம்

சென்னை மாநகரப் பேருந்தில் மாணவர்கள், பெண்ணுக்கு வெட்டு

செய்திப்பிரிவு

வண்ணாரப்பேட்டையில் பேருந்துக்குள் புகுந்த கும்பல் கல்லூரி மாணவர்கள் 3 பேரை அரிவாளால் வெட்டியது. இதில் அருகே இருந்த ஒரு பெண் பயணிக்கும் வெட்டு விழுந்தது.

சென்னை சுங்கச்சாவடியில் இருந்து திருவான்மியூருக்கு மாநகர பேருந்து 6டி வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தது. கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 50–க்கும் மேற்பட்டோர் பேருந்தில் இருந்தனர். காலை 9 மணியளவில் வண்ணாரப்பேட்டை நிறுத்தத்தில் பேருந்து நின்றது. அப்போது 10 பேர் கொண்ட கும்பல் கையில் கத்தி, அரிவாளுடன் பேருந்துக்குள் ஏறி, மாநிலக் கல்லூரி மாணவர்களான மணலியை சேர்ந்த ராஜா (22), அத்திப்பட்டு சரத்குமார், மீஞ்சூர் நாகராஜ் ஆகியோரை சரமாரியாக வெட்டினர். இதில் அருகில் இருந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கவுரிக்கும் (65) வெட்டு விழுந்தது.

அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டபடி பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். பயணிகள் சிலர் மர்ம நபர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாள், கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து, படுகாயங்களுடன் துடித்துக் கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவர் நாகராஜுக்கு தலை, கழுத்து பகுதியில் பலத்த வெட்டு விழுந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் வெட்டப்பட்டதை அறிந்ததும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் பலர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் சில நாட்களுக்கு முன்பு தங்கசாலை புது பேருந்து நிலையம் அருகே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வெட்டு விழுந்தது. மாநிலக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

அதற்கு பழி வாங்கும் விதத்தில் மாநிலக் கல்லூரி மாணவர்களை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வெட்டியுள்ளனர். காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் உடனடி நடவடிக்கையில் இறங்கிய காவல் துறையினர் பச்சையப்பன் கல்லூரி 3-ம் ஆண்டு மாணவர்கள் சுப்புராஜ், திவாகர் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் ராஜா, எம்.எஸ்சி.

2–ம் ஆண்டும், சரத்குமார் பி.எஸ்சி. 2–ம் ஆண்டும் நாகராஜ் பி.ஏ. 3-ம் ஆண்டும் படித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு வண்ணாரப்பேட்டை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடுமையான தண்டனை கொடுக்கப்படுமா?

இதுபோல வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 307-வது பிரிவு கொலை முயற்சி வழக்கு (7 ஆண்டு சிறை), 502-வது பிரிவு கொலை மிரட்டல் வழக்கு (3 ஆண்டு சிறை), 324-வது பிரிவு படுகாயம் உண்டாக்குதல் (3 ஆண்டு சிறை), 147, 148-வது பிரிவுகள் கூட்டம் கூடி சதித் திட்டம் தீட்டுதல் (ஒரு ஆண்டு சிறை) ஆகிய அனைத்து பிரிவுகளின் கீழும் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT