திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில், ஆடித் தபசு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி வைபவம் நேற்று மாலை 6.26 மணிக்கு நடைபெற் றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இத்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் கோமதி அம்பாள் பல்வேறு வாக னங்களில் எழுந்தருளி, வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 14-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான ஆடித் தபசு காட்சி விழாவையொட்டி, நேற்று காலை மூலஸ்தான சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம் நடைபெற்றது.
தங்க சப்பரத்தில் அம்பாள்
பகல் 11.45 மணிக்கு அம்பாள் தங்க சப்பரத்தில் தபசு மண்டபத்துக்கு எழுந்தருளினார். மாலையில் சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு, தெற்கு ரதவீதியில் அமைக்கப்பட்டிருந்த தபசு பந்தலுக்கு எழுந்தருளினார். அப்போது தபசு மண்டபத்திலிருந்து தங்க சப்பரத்தில் அம்பாள் எழுந் தருளி எதிர்பந்தலுக்கு வந்தார்.
மாலை 6.26 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் சங்கரநாராயண ராக அம்பாளுக்கு காட்சி கொடுக் கும் தபசு காட்சி வைபவம் நடை பெற்றது. அங்கு ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் இக் காட்சியை தரிசித்தனர்.
தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் சுவாமி சங்கரலிங்க ராக யானை வாகனத்தில் எழுந்தருளி, கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் 2-வது தபசு காட்சி வைபவம் நடைபெற்றது.
உள்ளூர் விடுமுறை
விழாவையொட்டி ரதவீதிக ளில் போலீஸார் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திரு நெல்வேலி, விருதுநகர், தூத்துக் குடி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட் டன. தபசு காட்சி விழாவையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விழாவின் 12-ம் நாளான இன்று பகல் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.