தமிழகம்

தானியங்கி கதவு பூட்டியதால் வீட்டு பால்கனியில் குழந்தையுடன் தவித்த தாய்: தீயணைப்பு படையினர் மீட்பு

செய்திப்பிரிவு

பெருங்குடியில் வீட்டின் தானியங்கி கதவு பூட்டியதால் பால்கனியில் குழந்தையுடன் தவித்த தாயை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

சென்னை பெருங்குடி 3-வது லிங்க் சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் வசிப்பவர் மதன். இவரது மனைவி தீபா. மகள் நிகிதா(2). நேற்று முன்தினம் காலை மதன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டின் பால்கனியில் தீபாவும், நிகிதாவும் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பால்கனியில் இருந்த தானியங்கி கதவு தானாக மூடியது. இந்த கதவை வீட்டுக்கு உள்ளிருந்து மட்டுமே திறக்க முடியும். வெளியில் இருந்து திறக்க முடியாது. இதனால் தீபாவும், நிகிதாவும் மீண்டும் வீட்டுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தீபா செல்போனை கையில் வைத்திருந்ததால் உடனடியாக கணவருக்கு தகவல் தெரிவிக்க, அவர் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பால்கனியில் தவித்துக் கொண்டிருந்த தீபா, நிகிதாவை பெரிய ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர்.

          
SCROLL FOR NEXT