சென்னையில் மேலும் 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறினார்.
சென்னை திருமங்கலம் நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். தமிழில் ‘வணக்கம்’ என்று கூறி அவர் தனது உரையைத் தொடங்கினார். அவர் பேசியதாவது:
சென்னையில் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது. இங்கு போக்குவரத்து தேவையை பேருந்துகள், புறநகர் ரயில், பறக்கும் ரயில் சேவைகள் பூர்த்தி செய்கின்றன. மெட்ரோ ரயில் சேவையும் செயல்பாட்டுக்கு வந்திருப்பதால், போக்குவரத்து வசதி மேம்படும்.
சென்னையில் தற்போது 28 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிந்து ரயில் சேவை தொடங்கப்பட் டுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு 2009 ஜனவரியில் மொத்தம் ரூ.14,600 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பின்னர், விரிவாக்கமாக வண்ணா ரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. தொலைவுக்கு மத்திய அரசு 2016 ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கான மொத்த மதிப்பீடு ரூ.3,770 கோடி.
சென்னை மெட்ரோ ரயில் சேவையின் 2-வது வழித்தடத்தில் திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுரங்கப்பாதையைப் பொறுத்தவரை, பயணிகள் தவறி தண்டவாளத்தில் விழாமல் இருக்க நடைமேடைகளில் திரைக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் பயணிகளை பத்திரமாக வெளியேற்ற உலகத் தரத்தில் அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுரங்கத்தில் போதிய காற்றோட்ட வசதியும் செய்யப்பட்டுள்ளது.
நில அழுத்தத்தை சமமாகத் தாங்கும் அதிநவீன சுரங்கம் குடை யும் இயந்திரங்களின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள சுரங்க ரயில் பாதையில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ஒரு ரயில் நிலையம் உள்ளது.
4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் ஒருமுறை பயணிக்கும்போது, 16 பேருந்துகள், 300 கார்கள், 600 இருசக்கர வாகனங்களால் ஏற்படும் நெரிசல் குறையும். முதல்கட்டமாக நடந்துவரும் மெட்ரோ ரயில் பணிகள் முடியும்போது, தினமும் 7.75 லட்சம் பேர் இதில் பயணம் செய்வார்கள்.
இந்த தொடக்க விழாவின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 341 கி.மீ.தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. மேலும், டெல்லி, கொல்கத்தா, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் 529 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி 522 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
மத்திய அரசு புதிய மெட்ரோ ரயில் கொள்கையை உருவாக்கி வருகிறது. அதன்படி, நிலமதிப்பீட்டு நிதிய முறை உள்ளிட்ட புதிய நிதி முதலீடு, போக்குவரத்து சார்ந்த மேம்பாடு ஆகியவை செயல்படுத்தப்படும். போக்குவரத்து சார் மேம்பாடு என்ற தேசிய அளவிலான கொள்கை உருவாக்கப்பட்டு அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் 2-வது கட்டமாக 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைப்பது குறித்து முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மக்களின் தேவையை பூர்த்திசெய்யும் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும்.
இவ்வாறு கூறியவர், ‘நன்றி’ என்று தமிழில் கூறி உரையை நிறைவு செய்தார்.