ஏற்காடு இடைத்தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்வது சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. உள்பட 21 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்காடு இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். வரும் 18-ம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறவும், 20-ம் தேதி வேட்பு மனு பரிசீலனையும் நடக்கிறது. டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
மனுத் தாக்கல் முதல் நாளில் தி.மு.க. வேட்பாளர் மாறன், அவருக்கு மாற்று வேட்பாளராக அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடேசன் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட ஆறு பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கடந்த 13-ம் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவும், குப்பனூர் கிளை கழக அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் செல்வம் மாற்று வேட்பாளராகவும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான சனிக்கிழமை மேலும் சிலர் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.