நீட் தேர்வு விலக்கு கோரும் சட்ட மசோதா அமலுக்கு வர ஜெயலலிதா சமாதியில் பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமியுடன் இணைந்து அமர வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் பேசினார்.
தமிழக கல்வி அமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் அய்யாகண்ணுவைப் போல டெல்லியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சென்னை திருவல்லிக்கேணியில் இன்று (திங்கள்கிழமை) 'நீட்: இந்தியா எனும் கோட்பாட்டிற்கே அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடையும், தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கமும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.
இதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் பேசுகையில், ''மத்திய அரசு ஒற்றை ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. காவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வு விலக்கு என எல்லாவற்றுக்கும் மத்திய அரசை நம்ப வேண்டியதாக உள்ளது.
ஓபிஎஸ், பழனிசாமி ஆகிய இருவரும் அணிகளாகப் பிரியாமல் ஒன்றிணைந்து செயல்பட்ட போது 31.3.2017-ல் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த மசோதா மத்திய அரசின் இலாகாவிலேயே இன்னும் இருக்கிறது. குடியரசுத் தலைவருக்கு இன்னும் அனுப்பப்படவில்லை.
நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் நசுக்கப்படுகிறது. இதுகுறித்துப் பேசும் அமைச்சர்களும் நீட் தேர்வு விலக்கு குறித்த அவசர சட்ட முன்வடிவு மத்திய அரசின் கைகளில் செல்ல நான்கைந்து மாதங்கள் ஆகும் என்பது வாடிக்கைதான் என்கிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும். உரிமைகளுக்காகப் போராட வேண்டும்.
நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா அமலுக்கு வர ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்த பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமியுடன் இணைந்து அமர வேண்டும். தமிழக கல்வி அமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் அய்யாகண்ணுவைப் போல டெல்லியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
ரேங்க் முறை இனி இல்லை, 11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு போன்ற பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்புகளை விட நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவை அமல்படுத்துவது அவசியம்'' என்றார் ஹரி பரந்தாமன்.