காவிரி பிரச்சினையில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சியினரும் சாலை, ரயில் மறியலில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பரவலாக கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. உணவகங்கள், கடைகள், பெட்ரோல் பங்குகள், திரையரங்குகள், காய்கறி சந்தைகள் மூடப்பட்டிருக்கின்றன.
ஆனால் டாஸ்மாக் கடைகள் வழக்கம் போலவே இயங்குகின்றன. முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.