தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கே.சுரேஷ்

போராட்டத்தில் டி.ராஜா, அன்புமணி ராமதாஸ், ஜவாஹிருல்லா பங்கேற்பு

எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஆலமரத்தடியில் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக 16-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் மத்தியில், மழையையும் பொருட் படுத்தாமல் மு.க.ஸ்டாலின் பேசிய போது,

‘‘தமிழ்நாட்டில் கட்டுப் பாட்டுடன் அறப்போராட்டம் நடத்து கிறோம் என்பதற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் ஓர் உதாரணம். தற்போது எரிவாயுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் அதற்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது. இதன் மூலம் தமிழர்களாக நாம் பிறந்ததை நினைத்து பெருமை கொள்கிறோம்.

போராட்டம் தொடரும்

தமிழக முதல்வர், பிரதமரைச் சந்தித்தபோது 23 கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார். அதில், எரிவாயு பிரச்சினை குறிப்பிடப் படாதது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு உறுதியாக தடை விதிக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும்’’ என்றார்.

நெடுவாசலில் போராட்டத்தை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான டி.ராஜா நேற்று பேசியபோது, “தமிழக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்படாமல், தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு கொள்கை களை மாற்றி அமைத்துள்ளது. எரிவாயு திட்டத்தை தடை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத் தில் மத்திய அரசை வலியுறுத் துவேன்” என்றார். முன்னதாக, போராட்டத்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும் சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

போராட்டத்தை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன். அதுமட்டுமின்றி நாடாளுமன்றத்தின் வெளியே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுவேன். இது அரசியல் பிரச்சினை அல்ல. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை. எனவே, இந்த போராட் டத்தின் மூலம் இங்கு மட்டுமல்ல தமிழகத்தில் எந்த இடத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்” என்றார்.

போராட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் த.செங்கோடன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வெளியூர் மக்கள் வெளியேற உத்தரவு?

தமிழக முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகும் போராட்டம் தொடர்ந்ததால் மீண்டும் போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்த நேற்று இரவு மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, மாவட்டக் காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் தங்கதுரை உள்ளிட்டோர் நெடுவாசலுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, செய்தியாளர்களிடம் கூறியபோது, “போராட்டத்தைக் கைவிடுமாறு போராட்டக் குழுவினருக்கு உத்தரவு ஏதும் நாங்கள் பிறப்பிக்கவில்லை. அதேசமயம் நெடுவாசலில் இருந்து வெளியூர் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்படவில்லை. ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 4) ஆட்சியர் சு.கணேஷ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவுகள் அடிப்படையில் செயல்படுத்தப்படும்” என்றார்.

இதற்கிடையே நெடுவாசல் போராட்டக் குழுவினர் நேற்று ஆட்சியர் சு.கணேஷை சந்திக்கச் செல்லாததால், அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

SCROLL FOR NEXT