தமிழகம்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் டிபிஐ-யில் முற்றுகை போராட்டம்: போலீஸார் அனுமதி அளிக்காததால் சாலை மறியல்

செய்திப்பிரிவு

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, மத்திய அரசின் இடை நிலை ஆசிரியர்களுக்கு இணை யான ஊதியம் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை நேற்று முற்றுகையிட்டனர். வளாகத்தினுள் செல்ல போலீஸார் அனுமதி அளிக்காததால் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய் வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துவது, மத்திய அரசு பள்ளி களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம், ஊதிய முரண்பாட்டை களைவது, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களைப் பாதிக்கும் வகையில் தொடக்கக்கல்வி இயக்கு நர் பிறப்பித்த செயல் உத்தரவுகளை ரத்து செய்வது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற் றுகையிடும் போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை யடுத்து நேற்று காலை 10 மணியளவில் அந்த அமைப்பின் மாநில தலைவர் எஸ்.மோசஸ், மாநிலப் பொதுச்செயலாளர் செ.பாலசந்தர், மாநிலப் பொரு ளாளர் எஸ்.ஜீவானந்தம், துணைத் தலைவர் இரா.மலர்விழி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கல்லூரிச் சாலையில் உள்ள டிபிஐ வளாகம் முன்பு திரண்டனர். இதனால், ஆசிரியர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில், டிபிஐ வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்காததால் ஆசிரி யர்கள் சாலையில் அமர்ந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கல்லூரிச் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் உண்டானது.

ஆசிரியர்கள் கைது

இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை போலீஸார் கைதுசெய்து வாகனங் களில் கொண்டுசென்றனர்.ஆசிரி யர்களை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம், புதுப்பேட்டை சமூக நலக்கூடம் உள்பட பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

ஆசிரியர்களின் போராட்டத்தை முன்னிட்டு டிபிஐ வளாகத்துக் குள் செல்லும் அனைத்து நுழை வாயில்களும் அடைக்கப்பட்டன. வெளிநபர்கள் யாரையும் போலீ ஸார் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. அங்குள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப் பட்டனர். டிபிஐ வளாகத்தைச் சுற்றிலும், உள்ளேயும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட ஆசிரியர்கள் தொடர்ந்து வந்தவாறு இருந்தனர். அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாதவாறு அவர்களை போலீஸார் உடனடி யாக வாகனத்தில் ஏற்றி எழும் பூர் ராஜரத்தினம் விளை யாட்டு மைதானத்துக்கு கொண்டு சென்றனர்.

வெளியூர்களில் இருந்து போராட் டத்துக்கு வந்த ஆசிரியர்களை போலீஸார் செங்கல்பட்டு எல்லை யிலேயே தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்ததாகவும், அதேபோல், பிற இடங்களில் இருந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய ஆசிரியர்களையும் போராட்டத்துக்கு வராதபடி தடுத்து அனுப்பியதாகவும் மாநில துணைத்தலைவர் மலர்விழி புகார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT