முன்பதிவு செய்துகொள்ள சென்னையில் 12 மையங்கள் உள்பட மொத்தம் 90 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் www.tnstc.in என்ற இணையதளம் வழியாக பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பொங்கலுக்கு ஊருக்கு செல்ல விரும்புவோர் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், சபரிமலைக்கு சிறப்புப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 954 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுமார் ஒரு லட்சம் பயணிகள் தினமும் பயணம் செய்கின்றனர்.
இதுதவிர, தீபாவளி, பொங்கல் மற்றும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்டதூரம் செல்லும் பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வகையில் இ-டிக்கெட் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், பொங்கல் திருவிழா அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தொடங்கவுள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், ஏராளமான பொதுமக்கள்தங்களின்சொந்த ஊருக்கு செல்வார்கள். இவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மேலும், பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து விரைவு போக்குவரத்துக் கழகத்தின் உயர் அதிகாரிகள் கூறும் போது, ‘’60 நாட்களுக்கு முன்பே விரைவு பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, பொங்கலுக்கு ஊருக்கு செல்ல விரும்புவோர் பேருந்துக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்துகொள்ள சென்னையில் 12 மையங்கள் உள்பட மொத்தம் 90 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் www.tnstc.in என்ற இணையதளம் வழியாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். வழக்கமான பேருந்துகளுக்கு முன்பதிவு முடிந்துவிடும் நேரத்தில், அடுத்த மாதம் இறுதியில் சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்படும்.
சபரிமலைக்கு 30 பேருந்துகள்
மேலும், சபரிமலைக்கு சீசன் தொடங்கவுள்ள நிலையில், விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க தொடங்கிவிட்டோம். தற்போது 2 பேருந்துகள்தான் இயக்குகிறோம். அடுத்த மாதத்தில் 30 பேருந்துகளை இயக்குவோம்’’ என்றார்.