சிறையிலிருந்து விடுதலையான பின், முதல்முறையாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சென்னையில் தனது இல்லத்தில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, இடைக்கால ஜாமீனில், கடந்த அக்டோபர் 18-ம் தேதி விடுதலையானார்.
அவர் போயஸ் தோட்ட இல்லத் துக்கு வந்தது முதல், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட வெளியிலிருந்து யாரையும் சந்திக்க வில்லை. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச் சர்களும், முக்கிய நிர்வாகிகளும் பலமுறை சந்திக்க முயன்றனர். ஆனால், அவர்களுக்கு அழைப்பு வராமலேயே இருந்தது.
இடைப்பட்ட காலத்தில் தீபாவளிப் பண்டிகை நாளில் கூட அதிமுக பொதுச் செயலாள ரிடமிருந்தோ, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்தோ தீபாவளி வாழ்த்துகள் வெளியாகவில்லை. தீபாவளி நாளில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோயில்களில் நேர்த்திக் கடன் மற்றும் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
அதேநேரம், 2 முறை கட்சியின் பொதுச் செயலாளராக, ஜெய லலிதா அறிக்கை வெளியிட்டார். அதில் தனது விடுதலைக்காக உயிர் துறந்தோருக்கு நிதி உதவி அறிவித்ததுடன், இனி யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண் டார். தமிழக மக்களுக்காகவும், கட்சியினருக்காகவும் எந்தத் தியாகத்தையும் செய்வேன், சோதனையிலிருந்து இறை அருளால் விடுபடுவேன் என்றும் கட்சியினருக்கு நம்பிக்கை அளித்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 29-ம் தேதி, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 16 அமைச்சர்களை, போயஸ் இல்லத்துக்கு அழைத்து, அவர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். அப்போது அரசு மற்றும் கட்சி ரீதியாக பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், முதன் முறையாக ஜெயலலிதா, தனது இல்லத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நேற்று பசும்பொன் முத்துராமலிங்கத்தின் 107-வது ஜெயந்தி நாளை முன்னிட்டு, அவரது உருவப்படம் போயஸ் தோட்டத்தின் வேதா நிலையம் இல்லத்தில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. அதற்கு ஜெயலலிதா பூக்களைத் தூவி மரியாதை செலுத்தினார்.
இப்புகைப்படத்தை அதிமுக தலைமை அலுவலகம் அதிகாரப் பூர்வமாக வெளியிட் டுள்ளது. சிறைக்கு சென்று வந்த பின்பு, அதிமுக அலுவல கத்திலிருந்து வெளியான ஜெய லலிதாவின் முதல் புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.