திருவள்ளூர் அருகே தமிழக பால்வளத் துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகன் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான அதிமுக ஊராட்சி தலைவர் உட்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த கொலை தொடர்பாக சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டுவைச் சேர்ந்தவர் ரவி(45). இவர் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகன்.
இவரின் கொலை வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த செவ்வாய்ப் பேட்டை ஊராட்சி தலைவர் வெங்கடேசன்(54), திருநின்றவூர் அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்த திருநாவுக்கரசு(45) ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை யில் தெரியவந்ததாவது:
பெருமாள்பட்டு அருகே உள்ள பொஜிகண்டிகை கிராமத்தில் ரவி வாங்கியிருந்த 3 ஏக்கர் நிலம் தொடர்பாக திருநாவுக்கரசுக்கும் ரவிக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. தன் தொழிலுக்கு போட்டியாக உள்ள ரவியை கொலை செய்ய திட்டமிட்ட திருநாவுக்கரசு, அதிமுகவைச் சேர்ந்த செவ்வாய்ப்பேட்டை ஊராட்சி தலைவர் வெங்கடேசன் மற்றும் வேப்பம் பட்டுவைச் சேர்ந்த முருகன் ஆகியோரின் உதவியை நாடினார்.
இதையடுத்து, திருநாவுக்கரசு, வெங்கடேசன், முருகன் ஆகியோர் ரவியை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.
அதன்படி, கடந்த 14 -ம் தேதி, பெருமாள்பட்டு பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த திருநாவுக்கரசு, முருகன் உள்ளிட்டவர்கள் ரவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இவ்வாறு அந்த விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, நேற்று முன் தினம் இரவு வெங்கடேசன், திருநாவுக்கரசு ஆகியோரை செவ்வாய்ப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெங்கடேசன், திருநாவுக்கரசு ஆகிய இருவரை, நேற்று அதிகாலை, திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2-ல் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முருகன் உள்ளிட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.