செய்யது பீடி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின்பேரில், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 40 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. செய்யது பீடி நிறுவனத்துக்குச் சொந்தமான முக்கிய இடங்களில் நேற்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. சென்னையில் 3 இடங்களிலும், திருநெல்வேலியில் 28 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல கோடி ரூபாய்க்கு வரி செலுத்தாமல் ஏமாற்றியிருப் பதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. சுமார் ரூ.3 கோடி பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெல்ஸ் சாலையில் உள்ள அக்குழுமத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களை கைப்பற்றி இருக்கிறோம். அவற்றை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.