பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சிப்காட் தொழில் மையத்தில்
இயங்கி வரும் தனியார் சாயத் தொழிற்சாலை சுத்திகரிப்பு மையத்திலுள்ள கழிவு நீர் தொட்டியில் 18.3.2014 அன்று மின்மோட்டார் பழுதினை நீக்க இறங்கிய போது, விஷவாயு தாக்கி, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த ஆனந்த்; நேபாளத்தைச் சேர்ந்த பீர்பகதூர், ஷிபா; விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த திரு சசிகுமார்; ஈரோடு நகரைச் சேர்ந்த முருகன்; சென்னிமலையைச் சேர்ந்த மதன்குமார், சுதாகர்; ஆகிய ஏழு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த ஏழு நபர்களின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் ஒன்பது நபர்கள் பாதிக்கப்பட்டு, மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
என்.எல்.சி. தொழிலாளி மரணம்
முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள மற்றொரு செய்திக் குறிப்பில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வடக்கு வெள்ளூர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 17.3.2014 அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கும், அந்த நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளியாகப் பணி புரிந்து வந்த ராஜா என்கிற ராஜ்குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறின் போது, மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் துப்பாக்கியால் சுட்டதில் ராஜா என்கிற ராஜ்குமார் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
ஒப்பந்த தொழிலாளி ராஜா என்கிற ராஜ்குமாரின் அகால மரணத்தால் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.