தமிழகம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 978 டாஸ்மாக் ஊழியர்களுக்கு மீண்டும் பணி?

எஸ்.ஸ்ரீனிவாசகன்

தமிழகத்தில் ஓராண்டுக்கும் மேல் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த 978 டாஸ்மாக் ஊழியர்களை மீண்டும் பணியில் நியமிக்கும்படி நிர்வாக இயக்குநர் சவுண்டையா நேற்று உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது. தமிழகத்தில் மது விற்பனையை டாஸ்மாக் நடத்தி வருகிறது. 6,500 டாஸ்மாக் கடைகளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

கூடுதல் விலைக்கு மது விற்பனை, அதிகாரிகளுக்கு பணம் வசூலித்துக் கொடுப் பது, பணம் கையாடல் உட்பட பல்வேறு காரணங்களால் டாஸ்மாக் ஊழியர்கள் ஓராண்டுக் கும் மேலாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். வழக்கமாக இதுபோன்று பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஓரிரு மாதங்களுக்குள் மீண்டும் காலியாகும் இடங்களில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.

ஆனால், அதிகாரிகளுக்கு பணம் வசூலித்து கொடுத்தது உள்ளிட்ட சில குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் நியமிக்க நிர்வாகம் மறுத்தது. இதனால் இவர்களுக்குப் பின் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும் பணியில் நியமிக்கப்படாமல் இருந்தனர். இதனால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.

இதில் சிலர் நீதிமன்றங்களில் தடை உத்தரவுகள் பெற்று பணியாற்றினர். அதிமுக, திமுக உட்பட பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் இந்த பணி நீக்கப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அதிகாரிகள், அமைச்சர் வரை பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் ஓராண்டுக்கும் மேலாக பலரும் பணியில் சேர முடியாமல் தவித்தனர். இந்நிலையில், 2014 ஆக. 31-ம் தேதிக்கு முன்னர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் நியமிப்பது குறித்து சென்னையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சவுண்டையா தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆலோசித்தனராம்.

நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் உட்பட சிலரைத் தவிர மற்றவர்களை உடனே பணியில் சேர்க்க நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டதாகத் தெரிய வருகிறது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, நிர்வாக இயக்குநர் உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுடன் மண்டல மேலாளர்கள் ஆலோசனை நடத்தினர். காலியாக உள்ள கடைகளின் பட்டியல் பெறப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர். இதில் பயனடையும் ஊழியர்களுக்கு தீபாவளி நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

மதுபாட்டில் அனுப்புவதில் முறைகேடு

இது குறித்து டாஸ்மாக் தொழிற் சங்க நிர்வாகிகள் கூறும்போது, மதுபாட்டில்களை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கிட்டங்கிகளில் இருந்து கடைகளுக்கு அனுப்புவதற்கு ஒப்பந்தகாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மது பாட்டில் பெட்டிகளின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று மது பாட்டில்களை கடைகளுக்கு அனுப்புவதில் ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. தேவை என்றால் ஊழியர்களே வாகனங்களில் சரக்குகளை ஏற்றிச்செல்லுங்கள் என அதிகாரி கள் கூறிவிட்டனர். ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் வாகனங்களில் மதுபாட்டில்களை ஏற்றிச் சென்றனர். ஆனாலும் ஒப்பந்ததாரர்களே சரக்குகளை அனுப்பியதாக கணக்குக் காட்டி, பணத்தை வழங்கும் முறைகேட்டுக்கு அதிகாரிகளே துணை போகின்றனர் என்றனர்.

SCROLL FOR NEXT