தமிழகம்

உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழக அரசின் ஒதுக்கீட்டை ரத்து செய்தது சமூக அநீதி: வேல்முருகன்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதை உச்ச நீதிமன்றம் தம்முடைய தீர்ப்பின் மூலம் ஒழித்துக் கட்டுவது என்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டிருக்கும் சமூக அநீதி என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' தமிழகத்தில் 189 உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் மாநில அரசின் ஒதுக்கீட்டை ரத்து செய்து அகில இந்திய அளவிலான சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு என்பது 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. உண்மையில் பின்தங்கிய மாநில மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அகில இந்திய ஒதுக்கீடானது வளர்ச்சி கண்ட பிற மாநிலத்தவரே அனுபவித்து வருகின்றனர்.

அதேபோல் தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதை உச்ச நீதிமன்றம் தம்முடைய தீர்ப்பின் மூலம் ஒழித்துக் கட்டுவது என்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டிருக்கும் சமூக அநீதியாகும்.

இப்போது தமிழக உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு அகில இந்திய அளவில் சேர்க்கை நடத்த வேண்டுமாம்! இனி தமிழக மாணவர்களுக்கு இந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்பு என்பதும் எட்டாக்கனியாகிவிடும்.

ஏற்கெனவே மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்து ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்து கல்விக் கனவை கானல்நீராக்கிவிட்டது உச்ச நீதிமன்றம்.

இப்போது மருத்துவம் படித்த மாணவர்கள், அரசு மருத்துவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ படிப்பிலும் அகில இந்திய சேர்க்கைக்கு திறந்துவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால் தமிழக மாணவர்களின் உயர் சிறப்பு மருத்துவ படிப்பு என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது.

இதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் சேவைத் தரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவத் துறை என்பதே வலுவற்றதாகிவிடும். இது தமிழகத்தின் நலனை மிகவும் பாதிப்படையச் செய்யும் உத்தரவாகும்.

மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அடுத்தடுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பதும் உத்தரவுகளை பிறப்பிப்பது என்பது இந்தியாவின் ஒற்றுமைக்கு அடித்தளமான மாநில சுயாட்சிக்கு மரண அடி கொடுப்பதாகும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டு தமிழகம் பறிகொடுத்திருக்கிற உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்'' என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT