பண மோசடி விவகாரத்தில் பட அதிபர் மதனின் குடும்பத்தை விசாரிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணை யர் அலுவலகத்தில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாரிவேந்தர் சார்பில் வழக்கறிஞர் பாலு கொடுத்த புகார் மனுவில் கூறி யிருப்பதாவது:
ஐஜேகே கட்சியிலுள்ள 5 துணைப் பொதுச் செயலாளர் களில் மதனும் ஒருவர். அவர் பல்கலைக்கழகத்தில் எந்த பொறுப்பிலும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்தும் அவரை நீக்கிவிட்டோம். ஆனால், எங்கள் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக அவர் பலரிடம் இருந்தும் பல கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
அதற்கு எஸ்.ஆர்.எம். நிறு வனமே பொறுப்பு என்று எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலனுக்கு அவர் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்ததோடு, பொய்யான தகவல்களை மற்றவர் களுக்கும் அனுப்பி நாடகமாடி வருகிறார். வாரணாசியில் இருந்தவாறு தனது குடும்பத்தார் மூலமும் அவர் பலரிடம் பணம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. எனவே, மதனின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்த வேண்டும். எங்கள் கல்வி நிறுவனம் மீது களங்கம் ஏற்படுத்தி பண மோசடி செய்த மதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.