தமிழகம்

பக்ருதீன், பிலால் மாலிக்கிற்கு 7 நாள் போலீஸ் காவல்

செய்திப்பிரிவு

பரமக்குடி முருகன் கொலை வழக்கில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்திரவிட்டது.

பரமக்குடி முருகன் கொலை வழக்கில் போலிஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகிய இருவரும் இன்று மாலை ராமநாதபுரம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது காவல்துறை தரப்பில், துணை கண்காணிப்பாளர் மாரிராஜனும், அரசு வழக்குரைஞர் முனியாண்டியும், குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக்கை 10 நாள் போலிஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என்று கூறினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஷேக் இப்ராஹிம், முன்னதாகவே 27 நாள் போலீஸ் காவல் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. எனவே, மேலும் 10 நாள் போலிஸ் காவல் இருவரின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என வாதிட்டார்.

இரு தரப்பினர்களின் வாதங்களையும் கேட்டறிந்த ராமநாதபுரம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி போலீஸ் பக்ருதீனையும், பிலால் மாலிக்கையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

மேலும், இந்த 7 நாளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரான தாய், தந்தை, மனைவி, குழந்தைகளை சந்திக்க ஒரு நாள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் தினந்தோறும் ஒரு மணி நேரம் சந்திக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

அத்துடன், டிசம்பர் 2-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக்கை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி வேலுச்சாமி கூறினார்.

SCROLL FOR NEXT