தமிழகம்

ஜெயலலிதா தலைமையில் பட்ஜெட் குறித்து ஆலோசனை: ஒரு மணி நேரம் நடந்தது

செய்திப்பிரிவு

புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று நடந்தது. இதில், நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், 134 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. முதல்வராக ஜெயலலிதா மே 23-ம் தேதி பொறுப்பேற்றார். இதையடுத்து 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 16-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்தது. முதல்வர் பதிலுரையுடன் சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

நிதிநிலை அறிக்கை

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங் கிய நிலையில், கடந்த பிப்ரவரியில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி பொறுப் பேற்றுள்ள நிலையில், 2016-17-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை இந்த அரசு தாக்கல் செய்ய வேண்டும். முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளார். இதை யடுத்து, பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இதற்கிடையே, கடந்த 5 ஆண்டு களில் முடிக்கப்பட்ட திட்டங்கள், முடிக்கப்படாத திட்டங்களின் தற்போதைய நிலை உள்ளிட்டவை தொடர்பாக அந்தந்த துறை அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதவிர, துறை செயலாளர்கள், அடுத்தடுத்து செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள், அவற்றுக்கான நிதித் தேவை மற்றும் சாத்தியக் கூறுகள் தொடர்பான விவரங் களை நிதித்துறையிடம் அளித்து வருகின்றனர். சமீபத்தில் தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் தலைமையில் நடந்த கூட்டத்திலும் நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டம்

இந்நிலையில், நிதிநிலை அறிக்கை தொடர்பான அமைச் சரவை ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத் தில் நேற்று நடந்தது. இது, 2-வது முறையாக அதிமுக அரசு பொறுப் பேற்ற பிறகு நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டமாகும். முதல்வர் ஜெயலலிதா தலைமை யில் நடந்த இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற் றனர். இதுதவிர, தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், நிதித்துறை செயலாளர் சண்முகம், திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா நேற்று பகல் 1.25 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார். 1.30 மணிக்கு கூட்டம் தொடங்கி, 2.30 மணிக்கு முடிந்தது. ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள், டாஸ்மாக் கடைகள் குறைப்பினால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நிதிநிலை அறிக்கை தாக்கல், துறைதோறும் மானிய கோரிக் கைகள் தொடர்பான விவாதங் களை எத்தனை நாட்கள் நடத்துவது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக் கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT