எழுத்துத் தேர்வு அடிப்படையில் 4 ஆயிரத்து 362 பள்ளி ஆய்வக உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் எழுதி வெளியிட்ட முகநூல் பதிவில், ''தமிழகத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசுப் பணிகளில் பல இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. குறிப்பாக பள்ளிக்கூடங்களில் 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை பள்ளிக் கல்வித் துறை நிரப்பாமல் வைத்துள்ளது.
இந்தப் பணியிடங்களை நிரப்ப கடந்த 2015 மே 31-ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்றாலும் பட்டதாரிகள் உள்பட 8 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களில் ஒரு பதவிக்கு 5 பேர் என அழைக்கப்பட்டு நேர்காணல் நடத்தப்படும் என்றும், அதற்கு 25 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 150 மதிப்பெண்களுக்கு எழுதப்பட்ட எழுத்துத் தேர்வுக்கு மதிப்பில்லாமல் போனதால் நேரம் செலவிட்டுப் படித்த இளைஞர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டதுடன், தங்களின் நிலை குறித்து என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றம் 7-8-2015 அன்று அளித்த உத்தரவில், இது போன்ற பணிகளுக்கு நேர்காணல் மூலம் நியமனம் செய்வது முறைகேட்டிற்கு வழிவகுக்கும் என தெரிவித்தது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசின் நிலை மாறவில்லை.
எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் அதன் முடிவுகளை வெளியிடாமலும், பணி நியமனம் செய்யாமலும் காலம் தாழ்த்தி வருவது இளைஞர்களின் எதிர்காலத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே, நீதிமன்ற உத்தரவை ஏற்று எழுத்துத் தேர்வின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.